'ஒரே நாடு ஒரே தேர்தலை' நோக்கி நகர்கிறதா மத்திய அரசு?
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் 4 வேலை நாட்களே எஞ்சியிருக்கும் சூழலில், இந்த மசோதாவை தாக்கல் செய்வது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக பதிவு செய்து கொள்வதை தடுக்கவே இந்த புதிய முயற்சி என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டால், ஒரு நபர் தன் இருப்பிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தாலும் சுலபமாக புதிய முகவரியில் வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அத்துடன் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை அமல்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற குறிக்கோளை நோக்கி மத்திய அரசு நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதற்கு வழிகோலும் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முனைப்புக் கொண்டுள்ளன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டாலும், குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சில தினங்கள் மட்டுமே நடைபெறவிருப்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கருதுகின்றனர். அதேபோல் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவுக்கும் நடப்பு கூட்டத்தொடரில் ஒப்புதல் கிடைக்கவாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
லக்கிம்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடங்கியிருக்கும் சூழலில், தேர்தல் சட்டத்திருத்தங்களுக்கு போதிய விவாதம் நடத்தாமல் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுவிடுமோ என்ற ஐயத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yQ2E1u
via IFTTT
एक टिप्पणी भेजें for "'ஒரே நாடு ஒரே தேர்தலை' நோக்கி நகர்கிறதா மத்திய அரசு?"